

ஈரோடு: ஈரோடு நகரில் ஓடை ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களுக்கு, மாற்று இடங்களில் வீடுகள் வழங்கி, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் பெய்த கன மழையால், அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சூளை ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில்,
ஓடையின் கரைப்பகுதியில் இருந்த குடியிருப்புகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. ஈரோட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: கனமழை காரணமாக, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஓடைகளில் உள்ள அடைப்பை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, ஓடைகளில் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரவும், தரைப் பாலத்தை உயர்த்தி கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓடை ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்கி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தற்போது மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 4 நடமாடும் மருத்துவ குழு, மக்களைத் தேடி மருத்துவக் குழுவும் மற்றும் மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவின் மூலமாக வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் 3 வேளையும் உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மழைநீரால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதிமுகவினர் உதவி: இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு, சேதங்களைக் கேட்டறிந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர், உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.