Published : 08 Nov 2023 06:00 AM
Last Updated : 08 Nov 2023 06:00 AM

நவம்பர் புரட்சி தின விழாவையொட்டி மூத்த கம்யூ. தலைவர் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.ராமமூர்த்தி சிலையை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் , கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று திறந்து வைத்தார். உடன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி (நவ.7) எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் மற்றும் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு விழா சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழா வுக்கு தலைமை வகித்தார்.

நிகழ்வில் அலுவலகத்தின் முகப்பில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியின் மார்பளவு சிலையை சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கட்சியின் மூத்ததலைவர் டி.கே.ரங்கராஜன், அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கினை திறந்து வைத்தார். பி.ராமமூர்த்தியின் மகள்கள்வைகை, பொன்னி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்ந்துநிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதில் களநாயகனாக திகழ்ந்தவர் பி.ராமமூர்த்தி. இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாட்களில் தமிழகம் முழுவதும் விழாக்கள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மூத்த தலைவர் என்.சங்கரய்யா ஆடியோ வாயிலாக பேசும்போது, “உலகையே உலுக்கிய நவம்பர் புரட்சி தினத்தில், இந்த 2 தலைவர்களின் அரங்கம் மற்றும் சிலை திறப்பு அனைத்து நிர்வாகிகளுக்கும் உற்சாகத்தை அளிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், ஏ.கே.பத்மநாபன், மாநில குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன், கட்டிட பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல தி.நகரில் உள்ள இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி, கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில், மூத்ததலைவர் இரா.நல்லகண்ணு கொடியேற்றினார். நிகழ்வில் கட்சியின் துணை செயலாளர் வீரபாண்டியன் எழுதிய ‘இஸ்ரேல்-ஹமாஸ், போரும் விடுதலையும்’ எனும் நூலை கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பினாய் விஸ்வம் வெளியிட, மமக தலைவர் எம்.எச்.ஐவாஹிருல்லா பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x