2013 குரூப்-2 தேர்வில் ஜெய்ஹிந்த் என எழுதிய விடைத்தாளை திருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

2013 குரூப்-2 தேர்வில் ஜெய்ஹிந்த் என எழுதிய விடைத்தாளை திருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2013-ல் நடத்திய குரூப்-2 தேர்வில் ‘ஜெய் ஹிந்த்’ எனக் குறிப்பிடப் பட்டதால், செல்லாது என அறிவிக் கப்பட்ட விடைத்தாளை திருத்தி மதிப்பெண் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவர், உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் குரூப்-2 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2013-ல் நடந்தது. பி.சி. மகளிர் தமிழ்வழிக் கல்வி பிரிவில் விண்ணப்பித்தேன். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று 31.8.2015-ல் நடந்த கலந்தாய்விலும் பங்கேற்றேன்.

184 மதிப்பெண் பெற்றதால், என்னை தேர்வு செய்யவில்லை. பிரதான தேர்வின் பகுதி 2 விடைத்தாளை செல்லாது என அறிவித்துள்ளனர். இதனால் எனக்கு வாய்ப்பு பறிபோயுள்ளது. எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து, பணி வழங்குமாறு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். டிஎன்பிஎஸ்சி தரப்பில், பகுதி 2-ல் இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த கட்டுரை எழுதும்போது, மனுதாரர் கடைசியில் ‘ஜெய்ஹிந்த்’ எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்வு விதி களை மீறியதால், விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது என கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றம் இந்த விவகாரத்தை வேறு விதமாக பார்க்கிறது. நாட்டின் செழிப்பான வளர்ச்சிக்கு இயற்கை வளங்களின் பாதுகாப்பு முக்கியம். இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மனுதாரர் கட்டுரையின் முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

போர் முழக்கமாக்கிய நேதாஜி: இதை பொறுப்பற்ற பதிலாக கருத வேண்டியதில்லை. ‘ஜெய்ஹிந்த்’ அல்லது ‘வெற்றி இந்தியா’ என்பது சாதாரண மானதாக பேசப்படுவது தான். பள்ளிக் குழந்தைகளின் பிரார்த் தனையின் முடிவிலோ, முக்கிய பிரமுகர்கள் பேச்சின் இறுதியிலோ இந்த வார்த்தையை கூறுவது வழக்கம்.

‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தை யின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் நேதாஜி, அந்த வார்த்தையை தனது இந்திய தேசிய ராணுவத்தின் போர் முழக்கமாக்கினார். இயற்கை வளங்களை பாதுகாத்தல் தொடர் பான கட்டுரை எழுதும்போது, இளைஞர்கள் உணர்ச்சி வசப் படுவதன் மூலம் அவர்களின் தேசபக்தியை உணர முடியும்.

சட்ட விரோதம்: எனவே, ‘ஜெய்ஹிந்த்’ குறிப்பிடப்பட்டிருந்ததால் மனுதாரரின் விடைத்தாளை செல்லாது என அறிவித்தது சட்டவிரோதம். எனவே, பிரதான தேர்வில் மனுதாரரின் பகுதி 2-க்கான விடைத் தாளை திருத்தி மதிப்பெண் வழங்க வேண்டும். பின்னர் பகுதி-1 மற்றும் பகுதி-2ல் மனுதாரர் பெற்ற மதிப்பெண் மூலம் மனுதாரர் தேவையான கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், அவருக்கு 4 வாரத்தில் பணி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுளளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in