

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. மேலும், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் அதையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தேவகோட்டை 23-வது வார்டு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (50). இவர், தனது மனைவி பார்வதி (45), மகள் சோபிகா (13) ஆகியோருடன் நேற்று முன்தினம் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இரவு முழுவதும் பெய்த மழையால் அதிகாலையில் திடீரென வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. வெளிப் புறமாக சுவர் சாய்ந்ததால், அவர்கள் உயிர் தப்பினர். தொடர் மழையால், தேவகோட்டை உஞ்சனையில் உள்ள அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
அக்.1-ம் தேதி முதல் இதுவரை மாவட்டம் முழுவதும் 42 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. திருப்புவனத்தில் அதிகபட்ச மழை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): சிவகங்கை 30 மி.மீ, மானாமதுரை 36, இளை யான்குடி 30, திருப்புவனம் 77.20, திருப்பத்தூர் 5.50, காரைக்குடி 5.20, தேவகோட்டை 39.80, காளையார்கோவில் 48.40 என மொத்தம் 272.10 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.