

கரூர்: ஆட்சியில் இல்லாமலேயே ஊழல் செய்தவர் அண்ணாமலை என கரூர் எம்.பி ஜோதி மணி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நான் பெண் என்பதால் பிழைத்துப் போகட்டும் என விட்டுவிட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்கள் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ள மத்திய அரசு அதிகாரத்தில் இருக்கும் ஆணவம்தான் அவரை இப்படி பேச வைத்திருக்கிறது.
மத்திய அரசுக்கு தெரிந்ததெல்லாம், எதிர்க்கட்சி உள்ள அனைத்து இடங்களிலும் அமலாக்கத் துறையை ஏவி விடுவதுதான். என் வீட்டுக்கு அமலாக்கத் துறையை ஏவினால், காட்டன் சேலைகளை தவிர வேறு ஏதும் இருக்காது. மணல் மாபியா மூலம் அண்ணாமலை மாதந்தோறும் ரூ.60 லட்சம் வாங்கிக் கொண்டு, ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்.
மாதம் ரூ.3.75 லட்சம் வாடகை கொடுக்கிறார். அவர் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். அவரது மிரட்டல், உருட்டலுக்கு பயப்படமாட்டேன். கர்நாடக காவல் துறையில் இருந்த ஒரு கருப்பு ஆடு அண்ணாமலை. 2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு துணை புரிவதற்காக சிக்மகளூரில் இருந்து ராம்நகருக்கு அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால், அங்கு பாஜக ஆட்சி அமையாததால் வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்தார். காவல் துறைக்கு விசுவாசமாக இல்லாமல் பாஜகவுக்கு விசுவாசமாக இருந்ததற்காக, அரசியல் அரிச்சுவடி தெரியாத அவரை பாஜகவில் சேர்ந்த ஓராண்டில் மாநிலத் தலைவராக்கி உள்ளனர். எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத அண்ணாமலைக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவாகிறது. ஆட்சியில் இல்லாமலேயே ஊழல் செய்தவர் அண்ணாமலை என தெரிவித்தார். காவல் துறைக்கு பதிலாக பாஜகவுக்கு விசுவாசமாக இருந்ததால், மாநில தலைவராகி உள்ளார்.