“மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது” - முத்தரசன்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: “மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது. அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாஜக ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. குறிப்பாக மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், பொருள் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளில் அதானி குழும நிறுவனங்களின் அதிகார எல்லைக்கு வேகமாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 அறிமுகம் செய்யப்பட்டது. நாடு தழுவிய கடுமையான எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரத்தை அளவீடு செய்ய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அறிவித்து, மாநில அரசுகளை அமலாக்குமாறு நிர்பந்தித்து வருகிறது. ஏற்கெனவே மின்சார விநியோகத்தில் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டால்தான் மாநில அரசு இன்றியமையாத் தேவைகளுக்கு கடன் வாங்கும் அளவை அதிகரிக்க முடியும் என நிபந்தனை விதித்தது. இப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அது பொதுமக்களுக்கு பெரும் துயரம் அளிப்பதாக முடியும். இதன் பாதக விளைவுகளை உணர்ந்த கேரளம் உட்பட சில மாநிலங்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ஏற்க முடியாது என அறிவித்துள்ளன.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் கசப்பான அனுபவம் பெற்றுள்ளனர். அண்மையில் அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு மிகை கட்டணம் நிர்ணயித்தது எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன் பணம் செலுத்தி மின்சாரம் பயன்படுத்துவது மோசடிக்கும், ஏமாற்றத்துக்கும் வழி வகுக்கும். இது பாஜக ஒன்றிய அரசின் எண்ணியல் வணிக முறை பெரும் குழும நிறுவன ஆதிக்கத்திற்கு மின் நுகர்வோர்களை தள்ளி விடும் பேரபாயம் கொண்டது.

மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது. அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.'' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in