தென்காசியில் கனமழை: வீட்டின் கூரை இடிந்து தொழிலாளி காயம்

மேலக்கடையநல்லூரில் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்த வீடு.
மேலக்கடையநல்லூரில் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்த வீடு.
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம், மேலக் கடையநல்லூரில் அருள்மொழி என்பவருக்கு சொந்தமான பழமையான 2 வீடுகள் உள்ளன. இந்த வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (42) வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நேற்று அதிகாலையில் வீட்டின் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியதால் மாரியப்பனின் மனைவி மாடத்தி, மகன்கள் ராமர், இசக்கி மணிகண்டன், மகள் மதுமிதா ஆகியோர் திண்ணையில் படுத்திருந்தனர். மாரியப்பன் மட்டும் வீட்டுக்குள் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, வீட்டின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மாரியப்பன் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கடைய நல்லூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாரியப்பனை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கடைய நல்லூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மாரியப்பனின் குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

வி.ஏ.ஓ அலுவலகம் சேதம்: கடையநல்லூர் வட்டம், மலையடிக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கூரை தொடர் மழையால் நனைந்து, நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in