Published : 07 Nov 2023 06:15 AM
Last Updated : 07 Nov 2023 06:15 AM
சென்னை: மாநகர பேருந்துகளுக்கு உள்ளேயே மழைநீர் ஒழுகியதால் அவதியடைந்த பயணிகள், பேருந்துகளை பழுது நீக்கி இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது, சாலிகிராமத்திலிருந்து பாரிமுனை நோக்கி 17இ வழித்தட எண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இருக்கை இருந்தும் அமர்ந்து பயணிக்க முடியாததால் நின்று கொண்டே பலர் பயணித்தனர். சில பயணிகள் பாதி வழியிலேயே இறங்கினர். சிலர் வேறு வழியின்றி குடை பிடித்தவாறும் பயணித்தனர். இதேபோல் பூந்தமல்லி - திருவொற்றியூர் இடையே இயக்கப்படும் 101 வழித்தட எண் கொண்ட பேருந்திலும் மழைநீர் ஒழுகியது.
இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், “பேருந்தில் பயணிகள் ஒதுங்கி ஒதுங்கி நிற்கும் அளவுக்கு மழைநீர் ஒழுகுகிறது. மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போக்குவரத்து நிர்வாகம் செய்திருக்க வேண்டும்; ஆனால் செய்யவில்லை. குறிப்பாகப் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெரும்பாலானவை பழையதாகவே உள்ளன. கட்டணமில்லா சேவையை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தரமான பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT