தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

கோப்புப்பம்
கோப்புப்பம்
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை மாதத்தில் முடிந்தது. இதையடுத்து, பயணிகள் நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்பேரில், மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு ரயில்களில் பண்டிகைக்கு சென்றுவர பொருத்தமான ஓரிரு நாட்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இருப்பினும், இந்த இரண்டு ரயில்களும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. எனவே, கூடுதல் சிறப்பு ரயில் மற்றும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:

கரோனாவுக்கு முன்பு, பண்டிகை காலத்தில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத மக்களுக்காக, பகல் நேர முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பண்டிகை காலத்தில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்போதிய அளவு இயக்கப்படாமல் உள்ளது. எனவே, நிகழாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை-நாகர்கோவில் இடையே 2 முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ``தற்போது, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறோம்.

பயணிகளின் தேவை அதிகமுள்ள வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்து உள்ளோம். அந்தவகையில், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை எதிர்பார்க்கலாம். மேலும், முன்பதிவில்லாத ரயில் இயக்குவது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in