Published : 07 Nov 2023 07:38 AM
Last Updated : 07 Nov 2023 07:38 AM

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடமையை செய்ய தவறிய காவல்துறை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடமையை செய்ய காவல்துறை தவறிவிட்டது என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை மணலியில் உள்ள கூட்டரங்கில் திராவிட ஒழிப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி மில்க் காலனி காவல் நிலையத்தில் மகேஷ் கார்த்திகேயன் என்பவர் மனு அளித்திருந்தார். அதற்கு அனுமதி வழங்காததால், அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பூந்தமல்லியில் செந்தில் மள்ளர் என்பவர் திராவிட சிந்தாந்த ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த உயர் நீதிமன்றம், கடந்த செப்.5-ம் தேதி அனுமதி வழங்கி விரிவான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், செந்தில் மள்ளரையும், அரங்க உரிமையாளரையும் போலீஸார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

செந்தில் மள்ளர் அனுமதி கேட்ட இடமும், மனுதாரர் அனுமதி கேட்கும் இடமும் ஒன்றல்ல. மேலும், காமராஜர் அரங்கத்தில் கடந்த செப்.2-ம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டை குறிப்பிட்டு, ‘திராவிட ஒழிப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு மாநாடு’ நடத்த தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை உருவாக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இந்த உயர் நீதிமன்றம் உதவும் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது.

தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்துக்கு எதிராக பேசியுள்ளனர். ஆனால், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம் போலீஸார் தங்களது கடமையைச் செய்ய தவறி விட்டனர்.

இதனாலேயே அவர்களது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திராவிட கொள்கைக்கு எதிராக மாநாடு நடத்த மனுதாரர் அனுமதி கேட்கிறார். இதற்கு அனுமதி வழங்கினால், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்றவர்கள், பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிராக பேசியதால் ஏற்கெனவே விரக்தியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் மேலும் அமைதியை சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிடும்.

எனவே, திராவிட கொள்கைக்கு எதிராக மாநாடு நடத்த அனுமதி வழங்கி மனுதாரரை குற்றம் செய்ய இந்த உயர் நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் விதமாக தவறான பிரசாரத்தை மேற்கொள்ளவோ, சிந்தாந்தம், கருத்தியலை ஒழிப்பதற்கு கூட்டம் நடத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு எதிரான மது, போதைப் பொருட்கள் மற்றும் ஊழல், தீண்டாமை போன்ற சமுதாய தீங்குகளை அழிக்கும் பணியில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x