Published : 07 Nov 2023 06:07 AM
Last Updated : 07 Nov 2023 06:07 AM
தென்காசி: போலீஸ் பாதுகாப்பு கேட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் திமுக ஊராட்சிக்குழு தலைவர் மனு அளித்தார். தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி உள்ளார்.ஆரம்பத்தில் திமுக உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டங்கள் சுமுகமாக நடைபெற்றன. சில மாதங்களில் உட்கட்சி பூசல் காரணமாக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினர்.
இதற்கிடையே தென்காசியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், அப்போதைய மாவட்டச் செயலாளருக்கு எதிராக மேடையிலேயே, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் குற்றச்சாட்டுகளைக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதனை பதவியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. அதன் பின்னரும் கோஷ்டி பூசல் முடிவுக்கு வரவில்லை.
கொலை மிரட்டல்: இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தமிழ்ச்செல்வி நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘நவ.5-ம் தேதி மாலை ஊத்துமலை அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள எனதுவீட்டுக்கு, ஆலங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திவ்யாவின் ஆதரவாளர்கள் 3 பேர் வந்தனர்.
வீட்டுக் கதவை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசி, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு பல தரப்புகளில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்ச்செல்வி கூறும்போது, “எனதுவீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாரிடம் கொடுத்துள்ளேன். தமிழக முதல்வர் இதுதொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எனது வளர்ச்சிபிடிக்காமல், எனக்கு எதிராக செயல்படுகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT