Published : 07 Nov 2023 06:15 AM
Last Updated : 07 Nov 2023 06:15 AM
பொன்னேரி: ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள சென்னை மற்றும்அதன் சுற்றுவட்டார லாரி உரிமையாளர்கள் நேற்று சென்னை, மணலி அருகே ஆண்டார்குப்பத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு, ஆன்லைன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், 40 சதவீத காலாண்டு சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை சரியான விலை நிர்ணயம் செய்து, வாகன உரிமையாளர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், வட சென்னை மற்றும் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டுநர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் பார்க்கிங் டெர்மினல்களை அமைக்க வேண்டும், தமிழகத்தில் விற்பனை வரியை குறைத்து, கர்நாடகாவில் உள்ளது போல் டீசல் விலையில் ரூ.7 குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
டிரைலர் உரிமையாளர்கள் சங்கம், தனியார் தண்ணீர் லாரிஉரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 38 மோட்டார் வாகன சங்கங்கள் அடங்கிய சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது.
இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகடிரைலர்கள் மற்றும் சரக்கு லாரிகள், தண்ணீர் லாரிகள் உள்ளிட்டபல்வேறு வகையான லாரிகள், சரக்கு வேன்கள் என சுமார் ஒரு லட்சம் லாரிகள், வேன்கள்இயங்காததால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொருட்கள் தட்டுப்பாடு: லாரி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக, மாதவரம் 200 அடி உள் வட்டச்சாலை, மணலி விரைவு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளின் ஓரம் மற்றும் அணுகுசாலைகளில் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள், டேங்கர் லாரிகள், சரக்கு லாரிகள் அணி வகுத்து நின்றன.
இந்த போராட்டம் தொடரும் பட்சத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு? - மேலும், காலவரையற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார லாரி உரிமையாளர்கள் நேற்றுசென்னை, மணலி அருகே ஆண்டார்குப்பத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில், 38 சங்கங்களின் நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தின்போது, லாரி உரிமையாளர்கள், அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT