

மதுரை / திண்டுக்கல்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பள பாக்கியை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஏ.ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன் தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வீ.அடக்கி வீரணன், மாவட்ட நிர்வாகி பி.எஸ்.ராஜா மணி, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் தனசேகரன், மார்க்சிஸ்ட் மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமா மகேஸ்வரன் நிறைவுரையாற்றினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் குமரன் நன்றி கூறினார். திண்டுக்கல்: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஒன்றியத் தலைவர் பி.பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் வி.அம்மையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க வேண்டும். 3 மாதங்களுக்கு மேல் உள்ள ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அருள் செல்வன் பேசினார். ஒன்றிய செயலாளர் துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேச்சியம்மாள், முருகன், பிச்சை முத்து, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.