

காரைக்கால்: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், கணவரால் தனக்கு கொலை மிரட்டல் உள்ளதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்க சாமி அமைச்சரவையில் அமைச் சராக இருந்த காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த சந்திர பிரியங்கா, அக்.10-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன் பின், அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தனது கணவர் சண்முகத்தின் மூலம் தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், தமக்கு எதிரான சதி வேலைகள் நடப்பதாகவும் புதுச்சேரி டிஜிபி சீனிவாசனிடம் சந்திர பிரியங்கா அண்மையில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக, காரைக்கால் மாவட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், சில மாதங்களாக கணவர் சண்முகத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் சந்திர பிரியங்கா நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியது: எனக்கு கொலை மிரட்டல் உள்ளது. எனக்கு எதிராக சில சதி வேலைகள் நடப்பதாக உணர்கிறேன். கணவர் மூலமாக இவை நடப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இனிமேலும் சரிப்பட்டு வராது என்பதால் விவாகரத்து கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.