Published : 07 Nov 2023 04:06 AM
Last Updated : 07 Nov 2023 04:06 AM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் காய்ச்சல் பாதிப்பால் மாணவி உயிரிழந்ததாகப் புகார் எழுந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பால் இறக்கவில்லையென சுகாதார துணை இயக்குநர் விஜய் சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
காரைக்குடி சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாண்டி. இவரது மகள் மேகலா (13) அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவிக்கு நவ.3-ம் தேதி காய்ச்சல் ஏற் பட்டது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பின்னர், நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மோசமான தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, காய்ச்சலால் உயிரிழந்ததாகப் புகார் எழுந்தது.
இது குறித்து சுகாதார துணை இயக்குநர் விஜய் சந்திரன் கூறியதாவது: பரிசோதனையில் டெங்கு, டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்பு இல்லையென தெரியவந்துள்ளது. மூளையில் ஏற்பட்ட பாக்டீரியல் தொற்றால் உயிரிழந்திருக்க வாய்ப் புள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் பெறப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபடுகின்றோம். தினமும் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, காய்ச்சல் பாதிப்பை கண்காணித்து வருகிறோம். மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மூலம் 630 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT