Published : 24 Jan 2018 08:13 AM
Last Updated : 24 Jan 2018 08:13 AM

அரசுப் பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம்: ராஜபாளையத்தில் பேருந்து சிறைபிடிப்பு; பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை

அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை ராஜூக்கள் கல்லூரி, பொறியியல், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை சிறைபிடித்தனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

போலீஸார் பேச்சு நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளவில்லை. காலை 8.30 மணிக்குத் தொடங்கிய போராட்டம் 10 மணி வரை தொடர்ந்தது. பின்னர் மாணவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியல் செய்தனர்.

மாணவர்களிடம் போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டம் காலை 11.45 மணி வரை தொடர்ந்தது. பின்னர் மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறினர்.

60 மாணவர்கள் கைது

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி, துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்திரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் மாணவிகள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஜாமலை வளாகம் பாரதிதாசன் பல்கலை. தொழிற்பிரிவு மாணவர்கள், பல்கலை. வளாகத்திலிருந்து நடந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள், அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள், கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் 90 பேர் கைது செய்யப்பட்டனர். முத்துரங்கம் மற்றும் குடியாத்தம் திருமகள் மில்ஸ் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்திலும், மாலையில் வடவள்ளியில் மறியலிலும் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து, சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள், காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். தருமபுரி பேருந்து நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரி மாணவர்கள் நித்திரவிளை சந்திப்பில் மறியல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x