Published : 07 Nov 2023 04:08 AM
Last Updated : 07 Nov 2023 04:08 AM

வேலூர் கோட்டையில் தொல்லியல் துறை பெண் அதிகாரி சிறைபிடிப்பு

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் நுழைவு வாயிலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயில் வளாகத்தில் உள்ள அறைகள் தொடர்பாக தொல்லியல் துறை பெண் அதிகாரி மற்றும் கோயில் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

வேலூர் கோட்டை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் அதன் அறங்காவலர்கள் பராமிப்பில் உள்ளது. கோயில் நிர்வாகம் தரப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மோற்சவ பணிகளுக்காக கோட்டை கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு பகுதியில் உள்ள அறைகளை பயன்படுத்திக்கெ்ாள்ள அனுமதி கேட்டு பயன்படுத்தினர். பிரம்மோற்சவம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் அதை மீண்டும் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், அந்த இரண்டு அறைகளின் தரைத் தளத்தை சேதப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோட்டை தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அதிகாரி அகல்யா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அறையை மீண்டும் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்குமாறு கோயில் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார்.

அவர்கள் அதை திருப்பி அளிக்காத நிலையில் அந்த இரண்டு அறைகளுக்கும் அகல்யா தனி பூட்டு போட்டுள்ளார். இதனால், இரு தரப்பினர் இடையே நேற்று மாலை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அங்கு இந்து முன்னணி நிர்வாகிகள், அகல்யாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினையின் போது வேலூர் கோட்டையின் பிரதான கேட்டை மூடுமாறு அகல்யா உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அதிருப்தி அடைந்தவர்கள் அவரை அங்கிருந்து வெளியில் செல்ல முடியாதபடி சிறை பிடித்தனர். இது குறித்த தகவலின் பேரில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை செய்ததுடன், அகல்யாவை மீட்டனர். மேலும், தொல்லியல் துறை அதிகாரிகளால் பூட்டிய பூட்டுகள் அகற்றப்பட்டு பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தொல்லியல் துறையின் நடவடிக்கையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கோட்டை நுழைவு வாயில் இரும்பு ‘கேட்’ மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x