வி.கே.சசிகலா | கோப்புப்படம்
வி.கே.சசிகலா | கோப்புப்படம்

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

Published on

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது எனஅறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன், "கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம், சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக தெரிவித்தனர். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது” என்று வாதிட்டார்.

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், "விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in