

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வில் சில மையங்களில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி காலிப் பணியிடங்கள் 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக இத்தேர்வை உயர் நீதிமன்றமே நடத்திவந்தது. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது. அந்தவகையில் சிவில் நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வெழுத 12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் அக்டோபர் 11-ம் தேதி வெளியானது. இதில் 2,526 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வு எழுத தகுதிபெற்றனர். இதையடுத்து சென்னையில் உள்ள 25 மையங்களில் முதன்மைத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் காலை மொழிப்பெயர்ப்பு தாள் தேர்வும், மதியம் சட்டம் சார்ந்த முதல் தாள் தேர்வும் நடைபெற்றது.
தேர்வர்கள் புகார்: தொடர்ந்து நேற்று காலையில் சட்டம் 2-ம் தாள் தேர்வும், மதியம் சட்டம் 3-ம் தாள் தேர்வும் நடத்தப்பட்டது. இதில் சில மையங்களில் காலையில் நடைபெற்ற சட்டம் 2-ம் தாள் தேர்வுக்கு பதிலாக, மதியத்துக்குரிய சட்டம் 3-ம் தாள் வினாத்தாள் வழங்கப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
பதிவாளரிடம் தகவல்: இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சிவில் நீதிபதி பணித் தேர்வுக்கான வினாத்தாளை சென்னை உயர் நீதிமன்றம்தான் வடிவமைக்கிறது. தேர்வு நடத்தும் பணிகளை மட்டுமே டிஎன்பிஎஸ்சி மேற்கொள்கிறது. தற்போது தேர்வர்கள் கூறிய புகார்கள் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உடனே தெரிவிக்கப்பட்டது. அவரும் இதை தலைமை நீதிபதி குழுவிடம் தெரிவிப்பதாகவும், தேர்வை தொடர்ந்து நடத்துமாறும் கூறினார்.அதன் அடிப்படையில் முதன்மைத்தேர்வை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட பணிகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.