அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 20 இடங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை: வங்கி லாக்கர்களை ஆய்வு செய்ய முடிவு

தானிப்பாடியில்  வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்ட ஜமால் வீடு (இடது)
தானிப்பாடியில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்ட ஜமால் வீடு (இடது)
Updated on
1 min read

திருவண்ணாமலை/சென்னை/கரூர்/கோவை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 20இடங்களில் 3-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 3-ம் தேதி வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. அமைச்சரின் மகன் கம்பன்,நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் அருணை வெங்கட் ஆகியோரது வீடு, அலுவலகங்கள், வரகூர் கிராமத்தில் உள்ள கிரானைட் குவாரி, தண்டராம்பட்டு தானிப்பாடியில் உள்ள தொழிலதிபர் ஜமாலின் கம்பி விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் அவரது வீடு, நெல் வியாபாரி முருகேசன் வீடு, தண்ணீர் நிறுவனம் என 20 இடங்களில் 3-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.

வங்கிக் கணக்கு பரிமாற்றம், சொத்து ஆவணங்கள், தொழில் முதலீடுகள், கணினியில் உள்ள தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன. மேலும், அமைச்சரின்மகன் கம்பன் மற்றும் தொழிலதிபர்கள், அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி லாக்கர்களை சோதனையிடவும் வருமான வரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்னும் ஓரிரு நாட்களுக்கு சோதனைதொடரலாம் என்று தெரியவருகிறது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு, கோட்டூர்புரம், வேளச்சேரி, தி.நகர், அண்ணாநகரில் உள்ள அவரது மகன் கம்பன், உறவினர்கள் வீடு,அலுவலகங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனதலைமை அலுவலகம், திருவல்லிக் கேணி, பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிகாரிகளின் வீடுகள், தியாகராய நகரில் உள்ள அப்பாசாமி கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம், உரிமையாளர் வீடு, ஹோட்டல்கள், கோட்டூர்புரத்தில் உள்ள தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் வீடு ஆகிய இடங்களிலும் 3-வது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், சென்னை அண்ணாநகர் மேற்கு, ஷெனாய் நகர், புரசைவாக்கம், வேப்பேரியில் உள்ள கட்டுமானத் தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், ஃபைனான்சியர் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கரூர் செங்குந்தபுரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் உதவியாளர் சுரேஷ் வீடு, காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனம், சுரேஷின் மாமனார் சக்திவேல் வீடு, பெரியார் நகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ வாசுகியின் சகோதரி பத்மாவின் வீடு ஆகிய 4 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன்ஸ் குடியிருப்பு வளாகத்தில் வசித்துவரும், திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் ராமின் அலுவலகம், காசா கிராண்ட் நிறுவன அலுவலகம், சிங்காநல்லுார் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் செந்தில்குமார் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in