Published : 06 Nov 2023 06:15 AM
Last Updated : 06 Nov 2023 06:15 AM

அதிவேக வாகனங்கள் ரேடார் மூலம் கண்காணிப்பு: போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தகவல்

சென்னை: போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சென்னையில் சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாகனங்களுக்கான வேக வரம்பை உயர்த்தி சென்னை போக்குவரத்து போலீஸார் கடந்த 1-ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். நேற்று முன்தினம் முதல் அது பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளின் முன்னேற்றம் காரணமாக வாகனங்களின் வேக வரம்பு 20 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வேக வரம்பு மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை போன்ற காரணிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஐஐடி மெட்ராஸ் மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுடன் போக்குவரத்து அமைப்பு மற்றும் சாலை வடிவமைப்பை பொறுத்து வாகனங்களின் புதிய வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலகுரக வாகனங்கள் (கார், மினி ஆட்டோ, மினி வேன்) மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், கனரகவாகனங்கள் (பேருந்து, லாரி, டிரக்குகள்) 50 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களும் 30 கி.மீ. வேகத்துக்குள்தான் செல்ல வேண்டும்.

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டும், விரைவான பயணத்துக்காகவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணமே எங்களது நோக்கம். அதற்கான பரிந்துரையே இந்த வேக வரம்பு நிர்ணயம்.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில்தான் வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்பதை வேக கட்டுப்பாடு கருவி மற்றும் ரேடார் மூலம் கண்காணித்ததில் முதல் நாளில் விதிமீறலில் ஈடுபட்டதாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல், வாகன அடர்த்தியை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கிறோம். அதை அடிப்படையாக வைத்து போக்குவரத்து மாற்றங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு 70 சதவீதம் பேர் ஆதரவும், 30 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். எழும்பூரிலிருந்து விமான நிலையம் செல்ல முன்பு ஒன்றரை மணி நேரம் ஆனது.

தற்போது 40 நிமிடத்தில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சென்னையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையின்போது நெரிசலை குறைக்க இப்போதே நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு பேருந்துகள் விதி மீறலில் ஈடுபடுகிறதா என்பதையும் தனிப்படை அமைத்து கண்காணிக்கிறோம். பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்கள் செல்லவும் தனிப்பாதை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டு பயணங்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் தெரிவித்தார். இணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x