

சென்னை: தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி கிடைத்ததும், பழவேற்காடு ஏரியின்முகத்துவாரம் தூர்வாரப்பட்டு, அலைத் தடுப்புச் சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப் படும் என்று மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரியின்முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைபட்டு, மீனவர்கள் கடலுக்குள் படகுகள் மூலம்செல்ல முடியாமல் மிகவும்சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, பழவேற்காடு மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.26.85 கோடிசெவலில் பழவேற்காடு ஏரிமுகத்துவாரத்தை தூர்வாரி,அலைத் தடுப்புச் சுவர்கள்அமைத்து நிலைப்படுத்தப்படும் பணிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கிஉள்ளது.
இந்த திட்டத்துக்கு, மத்தியஅரசின் சுற்றுச்சூழல் வனம்மற்றும் காலநிலை அமைச்சகத்தின் அனுமதி கடந்த ஆண்டு பிப்.14-ம் தேதி பெறப்பட்டுள்ளது. அந்த சுற்றுச்சூழல் அனுமதியில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் சட்டவிதிகளில் உள்ளபடி, தேசிய வன விலங்கு வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
அதன்படி, தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியைப் பெறும் பொருட்டு, மாநில வன விலங்கு வாரியத்துக்கு மீன்வளம் மற்றும் மீன்வளத் துறை மூலம் கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநில வனவிலங்கு வாரியக் கூட்டத்தில்,பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி, அலைத் தடுப்புச் சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தும் பணியை மேற்கொள்ள, மாநில வன விலங்கு வாரியத்தால், தேசிய வனவிலங்கு வாரியத்துக்கு அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேசிய வன விலங்கு வாரியத்தின் அனுமதி பெறப்பட்டவுடன், இந்தப் பணிகள் தமிழக மீன்வளத் துறை மூலம் தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்படும்.