

சென்னை: ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து லாரி, மினி வேன் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்றுமுதல் தொடங்கவுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்ப தாவது:
லாரி தொழில் நிலையை கருத்தில்கொண்டு ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். தற்போது விதிக்கப்பட்ட 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களில் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதங்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வடசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பார்க்கிங் டெர்மினல் அமைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துலாரி, மினி வேன் ஓட்டுநர்கள் இன்று (நவ.6) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்க உள்ளோம்.
சென்னை ஆண்டார்குப்பம் சந்திப்பு அருகே சென்னை மற்றும் சுற்றுவட்டார மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.