Published : 06 Nov 2023 06:10 AM
Last Updated : 06 Nov 2023 06:10 AM

குழந்தைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகம்: கடைகளில் அலைமோதிய கூட்டம்

சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் நேற்று குவிந்த பொதுமக்கள். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தாண்டு, குழந்தைகளுக்கான 100-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை நாள் என்பதால், ஏராளமானோர் ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

வழக்கமாக தீபாவளி நெருங்கும் சமயத்தில், ஒவ்வொரு கடைவீதிகளிலும் வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பர். ஆனால், இந்த முறை தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், சிறு வியாபாரிகள் பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது, சென்னையில் தீவுத்திடலில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். பட்டாசுகளை வாங்குவதற்கு ஏராளமானோர் தீவுத்திடலில் குவிந்தனர். அங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

இந்தாண்டு தீபாவளிக்கு பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கலர் கிரிஸ்டல், குடை கம்பி மத்தாப்பு, பீக்காக், மல்டி ஷார்ட் துப்பாக்கி, கிரிக்கெட் பால், பேட், ஹெலிகாப்டர், கூல்டிரிங்க்ஸ் டின் ப்ளவர் பாட், தாமரை மலர், டாப் கன் 27, லெமன் சோடா, கோல்டன் லயன், ஒலிம்பிக் டார்ச், லிட்டில் டிராகன் உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன.

இதுகுறித்து சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் அனீஸ் ராஜா கூறியதாவது: இந்த ஆண்டு குழந்தைகளுக்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புதிய ரக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி, ப்ளையிங் பேர்டு, ப்ளையிங் சக்கர், கலர் பென்சில், கோல்டன் டக், ரெயின்போ (ஒரே நேரத்தில் 7 விதமாக வெடிக்கும்), மல்டி கலர் கம்பி மத்தாப்பு (ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர்) உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

இந்த முறை பெரியவர்கள் வெடிக்கும் வெடிகள் அதிகளவில் விற்பனைக்கு வரவில்லை. முழுமையாக குழந்தைகளை இலக்கு வைத்து அவர்களுக்கான பசுமை பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இரவு வான வெடிகள் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இரவு வான வெடிகள் 120 ஷாட் முதல் 1,000 ஷாட் வரை இந்த முறை விற்பனைக்கு வந்திருக்கிறது. 1,000 ஷாட் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும், 16 முதல் 70 எண்ணிக்கையிலான பட்டாசுகள் இருக்கும் வகையிலான கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. மொத்தம் 24 வகையிலான கிப்ட் பாக்ஸ்கள் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.250-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.3,500 வரை கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு உள்ளன. தற்போது தீவுத்திடலில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் 100 சதவீதம் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். தீவுத்திடலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக கடையில் பட்டாசுகளை வாங்கினால், அதற்கான ‘பில்’ ஐ பொதுமக்கள் கட்டாயம் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். ஆன்லைனில் சீன பட்டாசுகள் அதிகம் விற்பனையாவதால் பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், சிறு வியாபாரிகள் கூறியதாவது: இந்த முறை தமிழக அரசு கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பட்டாசுகடைகளுக்கான ஷெட் அமைப்பதில் பல கெடுபிடிகள் உள்ளன. இதனால், சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு தமிழக அரசு தளர்வு அளித்து, கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

கடைகளுக்கான லைசென்ஸ் கடைசி நேரத்தில் வழங்குவதால், கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகிறது. எனவே, குறைந்தது, 10 நாட்களுக்கு முன்பாவது அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘கடைவீதிகளில் பட்டாசு கடைகளை பெரிதாக பார்க்க முடியவில்லை. தீவுத்திடலில் மட்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால், தென்சென்னை பகுதியில் வசிக்கும் மக்கள் அவ்வளவு தொலைவு சென்று பட்டாசுகளை வாங்குவது சிரமமாக உள்ளது. அப்படி வாங்கினாலும், பட்டாசுகளை ரயில், பேருந்தில் ஏற்றி வர அனுமதி இல்லை’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x