

சென்னை: 4 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் நியமித்துள்ளார். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, விசிகவில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
முகவர்களுக்கு பயிற்சி: இதையடுத்து 13 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்துக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சென்னையில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தற்போது வடக்கு மண்டலத்தில் மேலும் 4 மக்களவைத் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, பெரும்புதூர் தொகுதிகளுக்கு தலைமை நிலையச் செயலாளர் அ.பாலசிங்கம், முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு, மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் பெ.தமிழினியன், மாநில செயலாளர் த.பார்வேந்தன் உள்ளிட்ட 12 பொறுப்பாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் நியமித்துள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி மேலிடப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் மறைவையொட்டி, தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.
இதில், கட்சியின் அமைப்புச் செயலாளர் கவிஞர் இளமாறன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலச் செயலாளர் அ.ர.அப்துர் ரகுமான், முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தயா.நெப்போலியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரி ஏனாம் மாவட்ட நிர்வாகத்துக்கான செயலாளர் உள்ளிட்ட 12 நிர்வாகிகளையும் திருமாவளவன் நியமித்துள்ளார்.