Published : 06 Nov 2023 06:00 AM
Last Updated : 06 Nov 2023 06:00 AM

களைகட்டிய தீபாவளி விற்பனை; புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள்: பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸார்

தீபாவளியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தீபாவளிக்கு முந்தைய கடைசி விடுமுறை நாளான நேற்று சென்னை, புறநகர் பகுதி மக்கள்புத்தாடைகளை வாங்க துணிக் கைகளில் குவிந்தனர். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட திட்டமிட்டிருப்போர் வரும் வெள்ளிக்கிழமையே புறப்பட்டு செல்ல இருப்பதால், நேற்றே புத்தாடைகளை வாங்க துணிக் கடைகளுக்கு படையெடுத்தனர்.

தி.நகரில் திரண்ட மக்கள்: சென்னை தியாகராயநகர் பகுதியில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் போன்ற சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் காலை முதலே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. இந்த கடைகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து புத்தாடைகளை அள்ளிச் சென்றனர்.

துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை அனல் பறந்தது. இதனால் அப்பகுதியில் நேற்று மாலை அதிக எண்ணிக்கையில் கார்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புத்தாடைகளை வாங்கிய பின் அனைவரும் அசைவ உணவகங்களை நோக்கி சென்றதால், உணவகங்களும் நிரம்பி வழிந்தன. நீண்ட நேரம் காத்திருந்தே உணவருந்தும் நிலை ஏற்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகரப் பகுதியில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து, பைனாகுலர் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக போலீஸார் கண்காணித்தனர். ரங்கநாதன் தெரு முனையில் காவல்துறை சார்பில் எல்இடி திரை அமைக்கப்பட்டு, திருடர்களிடம் இருந்து எப்படி ஜாக்கிரதையாக இருப்பது என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

மேலும், தனிப்படை போலீஸார் நகர் முழுவதும் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக பொது மக்களோடு மக்களாக கூட்ட நெரிசலில் வலம் வந்தனர். பெண் போலீஸாரும் இந்த கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ரங்கநாதன் தெருவில் துணி எடுக்க வந்திருந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த ராமு - விமலா தம்பதி கூறும்போது, "ரங்கநாதன் தெருவில் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியில் வரவே படாதபாடு பட்டோம். இந்த ஆண்டு நல்ல புதிய டிசைன் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன" என்றார்.

புரசைவாக்கத்தில்... புரசைவாக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, மக்கள் கூட்டத்தை சமாளிக்க ஏதுவாக ஜவுளிக் கடைகள் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. காலையில் கூட்டம் சற்று குறைவாக இருந்த நிலையில், மாலையில் துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

கொளத்தூரில் இருந்து துணி எடுக்க குடும்பத்தினருடன் வந்திருந்த ராஜலஷ்மி கூறும்போது, ஆண்டுதோறும் தீபாவளிக்கு நான் புரசைவாக்கத்துக்குத்தான் வருவேன். இங்கு நல்ல நல்ல டிசைன்களில் விரும்பிய வகைகளில் துணிகள் கிடைப்பதோடு, விலையும் மலிவாக உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் துணிமணிகள் ஒரே இடத்தில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

வண்ணாரப்பேட்டையில்... சென்னை புறநகர் பகுதிகள், மீஞ்சூர், பொன்னேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வட சென்னை வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடைகளை வாங்க குவிந்தனர். விடுமுறை நாள் என்பதால் குழந்தைகளுடன் வந்திருந்தனர். இங்கு சாலையோர கடைகளிலும் இளம் பெண்களுக்கான நவீன ரக, மலிவு விலையில் வண்ண ஆடைகள், காதணிகள், அலங்காரப் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சாலையோர கடைகளிலும் கூட்டம் அலை மோதியது.

புறநகரில்... புறநகர் கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அதிக அளவில் தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் குவிந்தனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தெருவோர கடைகளில் அறிவிக்கப்பட்ட சலுகை விற்பனை தகவலால் ஈர்க்கப்பட்ட மக்கள், அங்கும் அதிக அளவில் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், தாம்பரம், குரோம்பேட்டை கடை வீதிகளில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை, புறநகரில் நேற்று காலை முதல் மழை பெய்யாததால், மக்கள் அதிக அளவில் வெளியில் வந்த நிலையில், அனைத்து துணிக் கடைகளிலும் விற்பனை ஜோராக நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x