Published : 06 Nov 2023 04:02 AM
Last Updated : 06 Nov 2023 04:02 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தினமும் சராசரியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர் வெளி நோயாளி களாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் 50 பேர் வரை வந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதே போல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் உள் நோயாளிகளாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் கூறியதாவது: தற்போது பருவநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
3 சிறப்பு வார்டுகள்: குழந்தைகளுக்கு தனியாக காய்ச்சல் வார்டு மற்றும் ஒரு பொது காய்ச்சல் வார்டு, ஒரு தீவிர சிகிச்சை காய்ச்சல் வார்டு ஆகிய மூன்று சிறப்பு வார்டுகள் காய்ச்சல் பாதித்தவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் நிலவேம்பு குடிநீர், கீரை சூப், பருப்பு சூப் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் தான் தற்போது ஏற்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்பட்ட உடனே பராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
தொடர் காய்ச்சல் இருந்தாலோ, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டாலோ உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து வர வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கஞ்சி, பால், பருப்பு சூப், கீரை சூப், ஓஆர்எஸ் கரைசல் போன்ற திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார்.
தடுப்பு நடவடிக்கை தீவிரம்: இது தொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் கூறும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க சனிக்கிழமை தோறும் மாவட்டம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 53 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு, 3,449 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
இதில் 34 பேருக்கு மட்டுமே காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது. இருப்பினும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவும் சூழ்நிலை இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நில வேம்பு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் குறித்த விவரங்களை தினமும் சேகரித்து வருகிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதிக்கு சிறப்பு குழுவை அனுப்பி முழுமையாக ஆய்வு செய்யவும், மருந்து மாத்திரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 5 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் சிறப்பு மருத்துவ முகாமை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றார் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT