Published : 05 Nov 2023 06:01 PM
Last Updated : 05 Nov 2023 06:01 PM

மழைக் காலத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்

மதுரை: கும்பகர்ணனை போல் அரசு தூங்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக பூத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: ''தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழையே தமிழகத்துக்கு 45% குடிநீர் பற்றாக்குறையை போக்கும். தொடர் கனமழை பெய்யும் பொழுது சாலைகளில் தண்ணீர் தேங்கும் இதன் மூலம் தொற்றுநோய், மர்ம காய்ச்சல் பரவும் இது போன்ற காலங்களில் கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்த பொழுது பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களை காத்தார்.

ஆனால் தற்போது இரண்டு நாட்கள் மதுரையில் மழை பெய்து வருகிறது. மதுரையே தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது மதுரையில் தெப்பக்குளம் உள்ளதா அல்லது, தெப்பக்குளத்துக்குள் மதுரை உள்ளதா? நானே நேரில் பல்வேறு இடங்களைப் பார்த்தேன். குறிப்பாக பெரியார், காளவாசல், தெற்கு வாசல், நெல்பேட்டை, அப்போலோ மருத்துவமனை கோரிப்பாளையம், சிம்மக்கல் போன்ற பகுதியில் மழையின் தண்ணீர் தேக்கத்தால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சாலைகளில் பெரும் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் இருந்ததால் குழி ஆழம் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருடர் பாலம், செல்லூர், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் போன்ற சுரங்கப் பாதையில் நீர் சூழ்ந்து இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேங்கிய மழை நீரை வெளியேற்ற அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் புத்தாடை, இனிப்புகள் போன்றவற்றை வாங்கச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை மூலம் வழங்க வேண்டும். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதற்கு அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் கூட அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது மின்னல் தாங்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதேபோல் வீட்டின் சுவர் இடிந்துள்ளது இதற்குரிய நிவாரணத்தை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதிஸ்டாலின் தற்போது ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்குகிறார். இதை பார்க்கும் பொழுது நான் மலையை தூக்குகிறேன் என்று ஊர் மக்களை அழைத்து அதே மக்களிடம் இந்த மலையை என்மீது தூக்கி வையுங்கள் நான் சுமக்கிறேன் என்பது போல நகைச்சுவையாக முட்டாள்தனமாக உதயநிதி ஸ்டாலின் செயல் உள்ளது. இனியும் தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது மக்களும் ஏமாறப்போதும் இல்லை. தற்போது நீட் தேர்வு பயிற்சி முகாம் அறிவித்துள்ளீர்கள். இதன் மூலம் மக்கள் குழப்பும் நிலை உள்ளது.

நீட் தேர்வில், காவிரி பிரச்சனை, கல்விக்கடனில் தீர்வு காணவில்லை, விலைவாசி உயர்வுக்கு, சட்ட ஒழுங்குக்கு, கொசுக்களுக்கு தீர்வு காணவில்லை. இப்படி எதற்குமே தீர்வு காண முன்வரவில்லை. சில சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு இதை திசை திருப்புகிறார். ஆகவே இந்த மழைக் காலங்களில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, உயிரிழந்தவர்களுக்கு பேரிடர் துறையிலிருந்து நிவாரண நிதியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் மக்களை பாதுகாக்க அரசு விழிப்புடன் இருக்க வேண்டும், கும்பகர்ணனைப் போல் தூங்க கூடாது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x