பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 3 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 3 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 3 பேருக்கு எதிராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக்கூறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. அதையடுத்து நாடு முழுவதும் அந்தஅமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி பலரை கைது செய்தது.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ராமநாதபுரம், தொண்டி, நாகப்பட்டினம்என பல்வேறு இடங்களில் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த மே மாதம் கைது செய்தனர்.அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த அமைப்பைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ், அகமது இத்ரீஸ், முகமது அபுதாஹிர், காலித் முகமது, சையது இசாக், காஜா முகைதீன், யாசர் அராபத், பயாஸ்அஹ்மத் ஆகியோரின் ஜாமீன் மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்களான அப்துல் ரசாக், முகமதுயூசுப் மற்றும் கைசர் ஆகியோருக்கு எதிராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக என்ஐஏ செய்திதொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீவிரவாத சித்தாந்தத்தை தீவிரமாக ஆதரிக்கும் மற்றும் பரப்பி வரும் சட்டவிரோத இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கு எதிராக ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகம், மாவட்டங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in