Published : 05 Nov 2023 07:19 AM
Last Updated : 05 Nov 2023 07:19 AM
சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி வாயிலாக நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தேவைப்படும் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 3.01 லட்சம் மின்கம்பங்கள், 12,600 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 18,008 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.
மேலும், மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24 மணிநேரமும் உதவி செயற்பொறியாளர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்தும் பணியாற்ற வேண்டும்.
மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும்தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில்வைக்க வேண்டும்.
மின் தடங்கல் ஏற்பட்டால் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும். இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT