கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினர் மோதல் விவகாரம்: ஆதி திராவிடர் நல ஆணைய இயக்குநர் ஆய்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாநில ஆதி திராவிடர் நல ஆணைய இயக்குநர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் புதுப்பிக்கும் பணியின் போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 10 பேர் காயம் அடைந்தனர். இரு தரப்பினர் புகாரை தொடர்ந்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சோக்காடி கிராமத்தில் தமிழ்நாடு ஆதி திராவிடர் நல ஆணைய இயக்குநர் ரவி வர்மன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுகளில், ஆட்சியர் கே.எம்.சரயு, எஸ்பி சரோஜ் குமார் தாகூர், கோட்டாட்சியர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ் குமார், ஏடிஎஸ்பி விவேகானந்தன், டிஎஸ்பி தமிழரசி, வட்டாட்சியர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
