

சென்னை: வட கிழக்குப் பருவமழையை யொட்டி, சென்னை மெட்ரோ ரயில் வழித் தடங்களில் 350 நீர் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 2-ம் கட்ட திட்டப் பணிகள் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் வட கிழக்குப் பருவமழையையொட்டி, மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ளது.
அதன்படி, மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின் மோட்டார் மூலம் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன்களைக் கொண்ட 350 நீர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை (வழித்தடம்-3) 145 நீர் பம்புகளும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை (வழித்தடம்-4) 102 நீர் பம்புகளும், மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்க நல்லூர் வரை (வழித்தடம்-5) 103 நீர் பம்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர பனகல் பூங்காவில் 4 நீர் பம்புகள் நிறுவப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் மழைநீரானது மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கட்டப்பட்ட 1.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பனகல்பார்க் சம்ப்பில் சேமிக்கப்படும். பின்னர் நந்தனம் கால்வாய்க்கு திருப்பி விடப்பட்டு வெளியேற்றப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.