Published : 05 Nov 2023 04:00 AM
Last Updated : 05 Nov 2023 04:00 AM

சென்னையில் கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

பெரம்பூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை வரை விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று விடுமுறை அறிவித்தார்.

ஆலந்தூரில் 12 செ.மீ. மழை: நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னைஆலந்தூரில் 12 செ.மீ, புழலில் 11 செ.மீ, மீனம்பாக்கத்தில் 9 செ.மீ, அடையாரில் 7 செ.மீ, வில்லிவாக்கம், தரமணி, பெருங்குடி, மணலி, அண்ணாநகர், திரு.வி.க.நகர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி,

மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ, சென்னை ஆட்சியர் அலுவலகம், திருவொற்றியூர், வானகரம், ராயபுரம், அயனாவரம், நந்தனம், கோடம்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மாநகரில் பரவலாகப் பெய்த மழையால் கோயம்பேடு சந்தையில் மழைநீர் தேங்கியது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாயினர். கோயம்பேடு சந்தை அருகில் உள்ள சாலை, புரசைவாக்கம் தானா தெரு, பெரம்பூர் - அருந்ததி நகர் ரயில்வேசுரங்க நடைபாதை, கீழ்ப்பாக்கம் கோயில் தெரு, அயனாவரம் சபாபதி தெரு,

மேட்டு தெரு, ஐஸ்ஹவுஸ் போன்ற பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமலும், வாகனங்களை இயக்க முடியாமலும் அவதிப்பட்டனர். தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அங்கு தேங்கிய மழை நீரை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் வேளச்சேரி சாலையில் வெள்ள நீர் தேங்கியது. மாநகராட்சி நடவடிக்கையால் சாலையில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் நேற்று அதிகாலை நேரில் ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x