பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விசிக நாளை ஆர்ப்பாட்டம்; மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விசிக நாளை ஆர்ப்பாட்டம்; மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை
Updated on
1 min read

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை (24.1.2018) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும், பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் மக்கள் போராட்டம் மேலும் வெடிக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசும்போது, "போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதுபோல் ஏற்றுக் கொண்டு விட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (24.01.18) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதே போல் வரும் 27.01.18 அன்று திமுக சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திலும் விசிக பங்கேற்க்கும்.

போக்குவரத்து அமைச்சர் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று உறுதியாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் போராட்டம் மேலும் வெடிக்கும். எந்த கட்சியையும் சாராத மாணவர்கள்,பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த போராட்டங்கள் ஆட்சியாளர்களை பணிய வைக்கும்.

போக்குவரத்து கழகத்தை அரசுத் துறையாக மாற்றி, போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் இது போன்ற பின்னடைவுகளை சரி செய்ய இயலும்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in