பாகூர் சுற்று வட்டாரத்தில் கனமழை - நெற் பயிர்கள் நீரில் மூழ்கின

பாகூர் சுற்று வட்டாரத்தில் கனமழை - நெற் பயிர்கள் நீரில் மூழ்கின
Updated on
2 min read

புதுச்சேரி \ கடலூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, பாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 நாட்களில் இதுவரை 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று புதுச்சேரி முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை மட்டும் 6 செ.மீ. மழை பதிவானது.

இந்த மழையால் பாகூர், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் இரவு பெய்த கனமழையால் சித்தேரி அணைக்கட்டு நிரம்பியது. அணைக்கட்டில் இரண்டு ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடு கிறது.

வாக்குவாதம்: நாகப்பட்டினம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பணியின் ஒரு பகுதியாக பாகூர் கன்னியகோயில் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் சித்தேரி வாய்க்கால் வழியாக மணப்பட்டு ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்துக்காக வாய்க்காலில் சிறிய குழாய் புதைத்து வாய்க்கால் மூடப்பட்டது.

தற்போது பெய்த மழையால் வாய்க்கால் நிரம்பி அருகில் உள்ள விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பல ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் நேற்று நெடுஞ்சாலை பணி நடைபெறும் இடத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வாய்க்கால் அடைக்கப்பட்ட மண்ணை அகற்றி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

வாய்க்காலில் 3 அடுக்கு குழாய் பதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து அவ்வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது. தொடர்ந்து அடைக்கப்பட்ட பகுதியில் இருந்த மண் அகற்றப்பட்டு தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து விசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. கடலூர், சிதம்பரம், அண்ணாமலை நகர், பண்ருட்டி, புவனகிரி, வேப்பூர், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

கடலூரில் 48 மி.மீ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 44.2 மி.மீ, வானமா தேவியில் 37 மி.மீ, அண்ணாமலை நகரில் 37 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 28.2 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 28.2மி.மீ, புவனகிரியில் 20 மி.மீ, பண்ருட்டியில் 19 மி.மீ, குறிஞ்சிப்பாடியில் 18 மி,மீ, வேப்பூரில் 15 மி.மீ, விருத்தாசலத்தில் 12.2 மி.மீ, சேத்தியாத்தோப்பில் 10 மி.மீ மழை பெய்தது. நேற்று அதிகாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in