

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை அப்பாவு நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் பழனி, ஓட்டல் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு நவ. 24-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வீட்டில் புதிதாக டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று பழனியின் இளைய மகள் சமையல் செய்வதற்காக, வீட்டின் மாடியில் உள்ள சமையல் அறையில் காஸ் சிலிண்டரை திறந்து தீ பற்ற வைக்கும்போது ரெகுலேட்டரில் தீப்பற்றியது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவர் வீட்டின் கீழ்தளத்தில் இருந்த தனது குடும்பத்தினரிடம் இது பற்றி தெரிவித்தார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட குடும்பத்தினர் உடனே வீட்டை விட்டு வெளியேறினர். சிறது நேரத்தில் காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அனைவரும் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இது குறித்து புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ, தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கணக்கிடப் பட்டுள்ளது.