கொடைக்கானலில் மீண்டும் டிரெக்கிங் சுற்றுலா தொடக்கம்- புதிய மலையேற்றப் பாதைகள் அமைக்கும் பணி தீவிரம்

கொடைக்கானலில் மீண்டும் டிரெக்கிங் சுற்றுலா தொடக்கம்- புதிய மலையேற்றப் பாதைகள் அமைக்கும் பணி தீவிரம்
Updated on
2 min read

கொடைக்கானல் வனப்பகுதியில் 2006-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட டிரெக்கிங் (மலையேறும் நடைப் பயணம்) சுற்றுலா கோடை ஆப் சீசனில் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற் காக வனத்துறை ரூ.37 லட்சம் மதிப் பீட்டில், புதிய டிரெக்கிங் மலையேற்றப் பாதைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சவால்கள் நிறைந்த சாகசம்

இந்தியாவில் உள்ள 75 சிறந்த கோடை வாசஸ்தலங்களில் கொடைக் கானல் முக்கிய இடத்தைப் பெற் றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், ஓய்வு நேரங்களில் அந்நாட்டு அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன், இந்த கொடைக்கானல் மலையில் டிரெக்கிங் (மலையேறும் நடைப் பயணம்), ஹைக்கிங் (நெடுந்தூரப் பயணம்), ரோப்லிங் (கயிறுகட்டி மலை இறங்குதல்) போன்ற சாகசங்களில் ஈடுபடுவர். அதற்காக, கொடைக்கானலிலிருந்து கும்பக்கரை, கொடைக்கானல் தொப்பித்தூக்கி பாறையிலிருந்து பெரியகுளம் மற்றும் கொடைக்கானலிலிருந்து கேரள மாநிலம் மூணாறு மலை உச்சி வரை மொத்தம் 110 கி.மீ. தொலைவுக்கு ஆங்கிலேயர் மலையேற்றப் பாதை அமைத்து டிரெக்கிங் சென்றனர். இந்த மலையேறும் பாதையில் தென் படும் செங்குத்துப் பாறைகள், புல் வெளிகள், பசுமைப் பள்ளத்தாக்குகள் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாகவும், டிரெக்கிங் செய்வதற்கு சவாலான தாகவும் இருக்கும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின், தமிழகத்தில் மக்கள் மத்தியில் டிரெக்கிங் செய்வதில் பெரிய அளவில் ஆர்வம், விழிப்புணர்வு இல்லாததால் கொடைக்கானல் மலைப்பகுதியில் 2006-ம் ஆண்டு டிரெக்கிங் நிறுத்தப்பட்டது.

தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதல் பெண்கள், குழந் தைகள் வரை டிரெக்கிங், ஹைக்கிங் (நெடுந்தூரப் பயணம்), ரோப்லிங் (கயிறுகட்டி மலையிறங்குதல்) போன்ற சாகச பயிற்சிகளில் ஈடுபட விரும்புகின்றனர். அதற் காக, அவர்கள் மூணாறு, இடுக்கி, தேக்கடி கோடைவாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். அதனால், தமிழகத்தில் உள்ள கோடைவாசஸ்தலங்களில் டிரெக்கிங் மலையேறும் இடங்களை புதுப்பொலிவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கொடைக்கானல் வனப்பகுதியில் டிரெக்கிங் மலையேறும் பாதைகள் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கேரளத்தைப்போல் வனத்துறை யினரே வழிகாட்டியாக சுற்றுலா பயணிகளை டிரெக்கிங் அழைத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப் படுகிறது.

மன்னவனூரில் படகு சவாரி

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஊட்டி, குன்னூர், ஏலகிரி, கோத்தகிரி, ஆனைமலை, மங்கிபால்ஸ் போன்று தொடக்கத்தில் கொடைக்கானல் டிரெக்கிங்கும் பிரபலமாக இருந்தது.

வேட்டில், பைன் மரங்கள் மலையேறும் பாதையை ஆக்கிரமித்து, வழித்தடங்கள் மறைந்ததால் மலையேறும் பயிற்சிக்குச் சென்றவர்கள், வழிதெரியாமல் மீண்டும் வர முடியால் தவித்தனர். ஊழியர் பற்றாக்குறையால் வனத்துறையினராலும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும், உடன் பாதுகாப்புக்கு செல்லவும் முடியவில்லை. அதனால், 2006-ம் ஆண்டு டிரெக்கிங் நிறுத்தப்பட்டது.

தற்போது கொடைக்கானல் ஈக்கோ சுற்றுலா தலம் அமைக்கப்படுவதால், மீண்டும் டிரெக்கிங் தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக மன்னவனூர் ஏரியில் படகு சவாரி அமைத்து, அங்கு வனப்பகுதியில் 4 கி.மீ. தொலைவுக்கு மட்டும் புதிய டிரெக்கிங் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. கோடை ஆப் சீசனில் இப்பகுதியில் டிரெக்கிங் தொடங்கப்படுகிறது. டிரெக்கிங் பாதையில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க குடில்கள், உணவு விடுதி, நடமாடும் கழிவறைகள் அமைக்கப்படுகின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in