விருதுநகரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை - 2 வீடுகள் இடிந்து சேதம்
விருதுநகர்: விருதுநகரில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று அதி காலை வரை பலத்த மழை பெய்தது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது.
அதோடு, பலத்த இடி மின்னல் காரணமாக பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின் தடை செய்யப்பட்டது. தொடர் மழையால், நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. விருதுநகர் 34-வது வார்டு பாத்திமா நகர் பகுதியில் 60 ஆண்டுகள் பழமையான புங்கை மரம் வேரோடு சாய்ந்தது. ரேஷன் கடை, அங்கன்வாடி சுற்றுச் சுவர் சேதமடைந்தன.
பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். கனமழை காரணமாக நரிக்குடி மருது பாண்டியர் வீதியில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளம் நடுத் தெருவில் பொற்கண்ணன் என்பவரது வீடும் சேதமடைந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் (மி.மீ.ல்): திருச்சுழி 39, ராஜபாளையம் 13, வில்லிபுத்தூர் 17, விருதுநகர் 23, சாத்தூர் 14, சிவகாசி 15, பிளவக்கல் 27, கோவிலாங்குளம் 46, வத்திராயிருப்பு 20, வெம்பக் கோட்டை 11, அருப்புக்கோட்டை 44, காரியாபட்டி 51 மி.மீ. மழை யளவு பதிவானது.
