

கரூர்: கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி கூறியது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வசூல் யாத்திரை கரூரில் மிகப்பெரிய தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கரூரில் 2 கி.மீ தொலைவு நடந்தார். கூட்டம் இல்லாததால் இன்று (நேற்று) உப்பிடமங்கலம் சந்தையில் இருந்து 100 மீட்டர் நடந்துள்ளார். இதற்கு பெயர்தான் யாத்திரை. மணல் மாபியாவிடம் இருந்து பாஜக அலுவலகத்துக்கு மாதந்தோறும் ரூ.60 லட்சம் கொடுக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலை கேட்டு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டியது இல்லை.
மத்திய பாஜக அரசு 2 ஆண்டுகளாக தொகுதி வளர்ச்சி நிதியை வழங்கவில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? தனது சொத்து மதிப்பு, தனது உறவினர்கள் பணம் சம்பாதிப்பது குறித்து அண்ணாமலை வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? எனக்கு இந்த முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தால், எனது சொத்து விவரத்தை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.