Published : 05 Nov 2023 04:08 AM
Last Updated : 05 Nov 2023 04:08 AM
திருநெல்வேலி / தென்காசி / நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 924 கன அடியும், மணி முத்தாறு அணைக்கு 603 கன அடியும் நீர்வரத்து இருந்தது. பாப நாசம் அணையிலிருந்து 409 கன அடியும், மணி முத்தாறு அணையிலிருந்து 10 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
இதனாலும், மழை நீடிப்பதாலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடு முடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. நேற்று காலை அணை நீர்மட்டம் 50.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், பாசனத்துக்காகு 100 கன அடி தண்ணீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் பெய்துள்ள மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 20, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 18.2, கொடுமுடியாறு- 10, நம்பியாறு- 22, மாஞ்சோலை- 12, காக்காச்சி- 18, நாலுமுக்கு- 28, ஊத்து- 9, அம்பாசமுத்திரம்- 22, சேரன்மகாதேவி- 9.2, ராதாபுரம்- 23, நாங்குநேரி- 5.6, களக்காடு- 10, மூலைக்கரைப்பட்டி- 15, திருநெல்வேலி- 30.6
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் சில இடங் களில் பலத்த மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்துக்கு மேல் கடையநல்லூர், தென்காசி, சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 120 மி.மீ. மழை பதிவானது.
கருப்பாநதி அணையில் 37 மி.மீ., கடனாநதி அணையில் 18, அடவிநயினார் அணையில் 15, சங்கரன்கோவிலில் 5, ராமநதி அணையில் 4, ஆய்க்குடியில் 3, செங்கோட்டையில் 2.10, தென்காசியில் 1.80, குண்டாறு அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, ராம நதி அணை, கருப்பா நதி அணையில் நீர்மட்டம் தலா ஓரடி உயர்ந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவி களிலும் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
குமரியில் 2,000 குளங்கள் நிரம்பின: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. மழை எச்சரிக்கையை தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் . நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் மிதமான தட்ப வெப்பம் நிலவியது. அதிகபட்சமாக மயிலாடியில் நேற்று 64 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சுருளோடு, தக்கலை, குளச்சல், ஆரல்வாய்மொழி, கோழிபோர்விளை, கன்னிமார், கொட்டாரம், முள்ளங்கினா விளை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வரும் நிலையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
மழை தீவிரமடைந்தால் அணையில் இருந்து உபரி நீரை திறக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர், வள்ளியாறு, கோதையாறு, பரளியாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழையால் பாதிப்பு ஏற்பட்டால் கரையோர பகுதி மக்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடங்கள், பொது கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 42.50 அடியாக இருந்தது. அணைக் விநாடிக்கு கு 418 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 174 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.78 அடியாக உள்ளது. அணைக்கு 539 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள 2,000 பாசன குளங்களும் நிரம்பி வழிகிறது. பாசன குளங்கள், அணைகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கும்பப் பூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT