‘கேட்’ ராஜேந்திரன் கொலை: முக்கிய குற்றவாளி காவல் நிலையத்தில் சரண்

‘கேட்’ ராஜேந்திரன் கொலை:  முக்கிய குற்றவாளி காவல் நிலையத்தில் சரண்
Updated on
1 min read

பிரபல ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மகி என்கிற மகேஷ், வெங்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

`கேட்’ ராஜேந்திரனை, கடந்த செவ்வாய்க்கிழமை பெரியபாளையம் பகுதியில், 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, காரிலும், மோட்டார் சைக்கிளிலும் தப்பியோடியது.

முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்துவிட்டு காரில் தப்பியோடிய கொலையாளிகளான மகேஷ், இம்ரான், திருப்பதி, மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, புதன் கிழமை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய, முக்கிய குற்றவாளியான திருவொற்றியூரைச் சேர்ந்த மகி என்கிற மகேஷ் மட்டும் போலீஸிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரமாக இருந்த நிலையில், மகி என்கிற மகேஷ், புதன்கிழமை இரவு வெங்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர், ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், ரவுடி `கேட்’ ராஜேந்திரன் கொலை வழக்கு தொடர்பாக, மகி என்கிற மகேஷுக்கு உதவிய முருகன் என்பவரை பெரியபாளையம் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in