

சோளிங்கர்: 100 நாள் வேலை திட்டத்தில் மிக குறைந்த நாட்களே பணிகள் வழங்கப்படுகின்றன. எனவே, எங்களுக்கு முறையாக பணிகளை வழங்க வேண்டும் என 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மருதலாம் ஊராட்சிக்கு உட்பட்ட தானியூர், கோடியூர், ஒன்றியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பெரும்பாலான மக்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு 100 நாள் வேலை திட்டத்தையே நம்பியுள்ளனர். இதுபோக, இந்த கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீப நாட்களாக இந்த பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணிகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிகபட்சமாக இந்த கிராமங்களைச் சேர்ந்த பலருக்கும் ஆண்டுக்கு 30 முதல் 35 நாட்களே பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கின்றனர்.
இதனால், பணிகளும், வருவாயும் கிடைக்காமல் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குறைதீர்ப்பு அலுவலரிடம் பாதிக்கப்பட்ட 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சார்பில் மனு அளித்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து 100 நாள் வேலை திட்டம் - பிரதம மந்திரியின் வீடு திட்டத்தின் மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் கோபிநாத்திடம் கேட்டபோது, "சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான நாட்களே பணிகள் வழங்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.
இது குறித்து சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான பணி வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.