

சென்னை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த அக். 21-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் நவ. 3 முதல் 6 வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை ஆய்வு செய்தார்.
அப்போது மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் 24 மணி நேர செயல்பாடு குறித்து அதிகாரிகள் விளக்கினர். மேலும், ‘TNSMART’ இணையதளம் மூலமாக சேகரிக்கப்படும் மழை, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் குறித்து விளக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் பொதுவான எச்சரிக்கை நடைமுறை வாயிலாக பொதுமக்களுக்கு கைபேசி மூலம் வழங்கப்படும் எச்சரிக்கை குறித்தும், கடலோரபகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் வாயிலாக எச்சரிக்கை செய்திகள் ஒலிபரப்பப்படுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் உள்ள வைகை, மேட்டூர் உள்ளிட்ட முக்கிய அணைகள், நீர்த்தேக்கங்களில் 75 விழுக்காடுக்கு மேல் நீர் இருப்பு இருப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம்- பழனி, திருநெல்வேலி- மணிமுத்தாறு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விவரம் தலைமைச்செயலரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது வரும் 6-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களிடம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா காணொலி மூலமாக தொடர்பு கொண்டு கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.