Published : 04 Jan 2018 09:53 AM
Last Updated : 04 Jan 2018 09:53 AM

ஜல்லிக்கட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்: ஜன.14 - அவனியாபுரம், ஜன.15 - பாலமேடு, ஜன.16 - அலங்காநல்லூரில் போட்டி

ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை வீரர்கள் 15 மீட்டர் தூரம் அல்லது 50 ச.மீ. பரப்பளவில் 30 விநாடிகளில் அடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு விளையாட்டு மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. அதனால், இந்த ஆண்டு மலேசியா, சென்னை, திருநெல்வேலி உட்பட இதுவரை நடக்காத இடங்களில் கூட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த, விழா கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். அவர்கள், அதற்கான விருப்ப மனுவையும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் நேற்று கொடுத்தனர். அவர்களுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

காளை, காளையர்க்கு விதிகள்

இதுகுறித்து ஆட்சியர் வீரராகவராவ் கூறியதாவது: வருவாய்த்துறை தலைமையில் போலீஸ், பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை அடங்கிய குழுவினர் ஜல்லிக்கட்டு விழா விதிமுறைப்படி நடத்தப்படுகிறதா என கண்காணிப்பர். காளைகள் துன்புறுத்தப்படாமல் விழாவை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காளைகளின் உடல் தகுதியை பரிசோதிக்க 10 கால்நடை மருத்துவக் குழுக்களும், 2 மொபைல் குழுக்களும் அமைக்கப்படுகின்றன. தகுதியான காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுடைய உடல் தகுதியைப் பரிசோதிக்க 10 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. காளைகள் முட்டி காயமடைந்தால், மாடுபிடி வீரர்களை மீட்டு சிகிச்சை அளிக்க 10 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றார்.

குறைந்தபட்சம் மூன்று வயதுக்கு மேற்பட்ட காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும். உயரம் 120 செ.மீ. அல்லது 4 அடி இருக்க வேண்டும். இந்த உயரம் திமிலின் பின்புறத்தில் இருந்து கணக்கிடப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கக்கூடிய தகுதியான காளைகளுக்கு 3 நாட்களுக்கு முன் டோக்கன் (முன் அனுமதி சீட்டு) வழங்கப்படும்.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளைகளை வீரர்கள் முதல் 15 மீட்டர் தூரம் அல்லது 50 ச.மீ. பரப்பளவுக்குள், 30 நொடிகளுக்குள் அடக்க வேண்டும். அதுவும் 3 துள்ளல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தொலைவுக்குள் காளைகளை பிடித்தால் மட்டுமே அவை அடக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்த 50 அடி தூரம் வரை 8 அடி உயரத்துக்கு இரட்டை பாதுகாப்பு வேலி (டபுள் பேரிகார்டு) அமைக்க வேண்டும்.

வீரர்கள் காளைகளின் வால் பகுதியையோ அல்லது கொம்புகளையோ பிடிக்கக் கூடாது. காளைகளின் கால்களையும் பிடிக்கக் கூடாது. காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாலை 3 மணிக்குள் முடிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x