

சென்னை: நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை செயல்படுத்துகிறது. இன்று காலை 8 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்ஸ்டாலின், மற்ற மாவட்டங் களில் காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 8 கி.மீ. நீளத்துக்கு பிரத்யேகநடைபாதை அமைக்கப்பட்டுள் ளது. சென்னை பெசன்ட் நகரில்டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் தொடங்கி, பெசன்ட் நகர் அவென்யூ சாலை, எலியட்ஸ் கடற்கரை வரை இப்பாதை நீள்கிறது. இங்கு வாகனங்கள் நிறுத்தம், ஓய்வு இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்லப் பிராணிகளுடன் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிசெய்யப்பட்டுள்ளது. மாதத் தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் இங்கு நடத்தப்பட உள்ளது.
உயர் ரத்த அழுத்தம் குறையும்: இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறும்போது, ‘‘உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, தினமும் 30 நிமிடம் என வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக, தினமும் 8 கி.மீ. தூரம், அதாவது 10,000அடிகள் வைத்து வேகமாக நடப்பதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களை தடுக்கமுடியும். தொடர் நடைபயிற்சியால் மன அழுத்தம் குறைவதுடன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் ஏற்படும் இதர நோய் பாதிப்புகளும் 30 சதவீதம் வரை குறையும்’’ என்றார்.