Published : 04 Nov 2023 06:10 AM
Last Updated : 04 Nov 2023 06:10 AM
மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கோரிக்கைகள், குற்றச்சாட்டுகளை அறிய மாநகராட்சி ஆணையர் அவர்களது வார்டுகளுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
முன்பு மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்தவர்கள், தினமும் காலையில் பணிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் வார்டுகளில் ஆய்வு செய்வர். மாமன்றத்தில் கவுன்சிலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் கீழ்நிலை அதிகாரிகளை நோக்கி கை காட்டி விடுவர். கவுன்சிலர்களின் கோரிக்கைகளையும், மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க பெரும்பாலும் நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை.
அதிகாரிகளை அனுப்பி தங்களுக்கு அறிக்கை தரும்படி அறிவுறுத்துவர். பல ஆணையர்கள் அதைக்கூட செய்வதில்லை. ஆணையர்களை கவுன்சிலர்கள் சந்திக்க முடியாத நிலையும் இருந்தது. அதனால், தற்போதெல்லாம் கவுன்சிலர்கள், மாநகராட்சி ஆணையர் அலுவலகம் பக்கம் வருவதை குறைத்துக் கொண்டனர்.
மாமன்ற கூட்டங்களுக்கு வந்துவிட்டு கையெழுத்திட்டு விட்டுச் செல் கின்றனர். அதனால், நாளடைவில் மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்கும் கவுன்சிலர்கள் எண்ணிக்கைகுறைந்து விட்டது.
வார்டில் உள்ள மோசமான சாலைகள், குடிநீரில் கழிவுநீர் கலப்பது, பாதாள சாக்கடை உடைப்பு போன்ற மாநகராட்சியின் மோசமான செயல்பாடுகளால் கவுன்சிலர்கள், மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல், அதிகாரிகளிடம் சொல்லி அதனை நிறைவேற்றிக் கொடுக்கவும் முடியாமல் அதிருப்தியில் உள்ளனர்.
அதிகாரிகள், வார்டுகளில் ஆய்வுக்கு வரும்போது கூட கவுன்சிலர்களை அழைப்பதில்லை. கவுன்சிலர்களுக்கு தெரியாமல் வார்டுகளில் பணிகளும் நடப்பது உண்டு. அதனால், அந்த வார்டு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள்கூட தங்களை மதிப்பதில்லை என்றுகவுன்சிலர்கள் மாமன்ற கூட்டங்களில் சொல்லி ஆதங்கப்பட்டனர்.
தற்போது புதிய ஆணையர் மதுபாலன் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்கிறார். பணிநேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தன்னை கவுன்சிலர்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கி உள்ளார்.
பொதுமக்கள் மட்டுமில்லாது, ஊழியர்கள், அதிகாரிகள், மண்டலத் தலைவர்கள் எளிதில் அணுகமுடிகிறது. காலையில் வார்டுகளில் ஆய்வு, மாலையில் ஆய்வுக் கூட்டம் என மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பணிகளை கேட்டறிந்து வருகிறார்.
ஆணையரின் இந்த அணுகுமுறையால் கவுன்சிலர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 58-வது வார்டு கவுன்சிலர் மா.ஜெயராமன் கூறிய குற்றச்சாட்டுகளை அறிந்துகொள்ள ஆரப்பாளையம் பகுதிக்கு ஆணையர் சென்றார்.
அங்கு நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளை கணக்கெடுத்து உடனடியாக வசூலிக்க வரு வாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதிய ஆணையரின் சுறுசுறுப்பான நடவடிக்கையால் கவுன்சிலர்கள் மக்கள் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT