

தஞ்சாவூர்: திமுக நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி,தஞ்சாவூரில் திமுக சார்பில்‘‘நீட் விலக்குநமது இலக்கு’’ என்ற வாசகத்துடன் க்யூ ஆர் கோடு மூலம் ஆதரவு தெரிவிக்குமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் தஞ்சாவூரில் ஒட்டப்பட்டிருந்த சில சுவரொட்டிகளில், நீட் என்ற வார்த்தையைமட்டும் மறைத்து அதன்மேல்,‘‘மது’’ என்ற வார்த்தை ஒட்டப்பட்டிருந்தது. இதனால், சுவரொட்டிகளில் ‘‘மது விலக்கு நமது இலக்கு’’என வாசகம் மாறியுள்ளது.
இதை பார்த்த திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும்,சுவரொட்டிகளில் ஒட்டப்பட்டுள்ள மது என்ற வார்த்தையை திமுகவினர் கிழித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘தஞ்சாவூரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மீது யாரோ `நீட்' என்ற வார்த்தை மீது `மது' என்ற வார்த்தையை ஒட்டியுள்ளனர். இந்த செயல் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.