ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்: நேர்மையான விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ‘ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவருக்கு என்ன ஆனது என்பது குறித்து நேர்மையான விசாரணை நடத்தி, அவரது குடும்பத்துக்கு நீதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜார்க்கண்ட் தலை நகர் ராஞ்சி நகரில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் குமார் என்ற மாணவரின் உடல், அவரது விடுதி அறையில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிப்பதற்காக சென்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாணவரின் அறையிலிருந்து சில தடயங்களும், தீப்பிடிக்கும் திரவங்களும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது உடற்கூராய்வின் முடிவில்தான் தெரியவரும் என்று ஜார்க்கண்ட் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவர் மதன் குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணங்கள் இல்லை என்று கூறப்படும் நிலையில், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து நேர்மையான விசாரணை நடத்தி, அவரது குடும்பத்துக்கு நீதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், ஜார்க்கண்ட் அரசுடன் தொடர்பு கொண்டு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு தமிழக அரசும், ஜார்க்கண்ட் அரசும் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் முன்வர வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in