Published : 18 Jan 2018 01:44 PM
Last Updated : 18 Jan 2018 01:44 PM

கலாமை முன்னோடியாக வைத்தே கட்சி பெயரை அறிவிக்கிறார் கமல்: ரசிகர் மன்ற பொறுப்பாளர் தகவல்

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜெ. அப்துல்கலாமை முன்னோடியாக வைத்தே, நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியிட இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே, மதுரையில் நேற்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினர். அகில இந்திய மன்றப் பொறுப்பாளர் தங்கவேல் தலைமையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர் அழகர், தஞ்சாவூர் பொறுப்பாளர் தர்ம சரவணன், திண்டுக்கல் பொறுப்பாளர் முபராக், சிவகங்கை பொறுப்பாளர் பெரியார் குணாதாசன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர், அகில இந்தியப் பொறுப்பாளர் தங்கவேல் கூறியதாவது: இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் அப்துல்கலாம். அவரை பின்பற்றியே, எங்களது தலைவரும் (கமல்) செயல்படத் திட்டமிடுகிறார். இதன் காரணமாகவே, கலாம் நினைவிடத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அங்கு புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கட்சியின் கொள்கை, லட்சியம், எதிர்காலப் பயண நோக்கம், தமிழக மக்களுக்கான சேவை போன்ற பல திட்டங்களை அறிவிக்க உள்ளார். அவர் இளைஞர்களை முன்னிலைப்படுத்தி ஒன்றிணைக்கும் சிந்தனையில் உள்ளார். கமலின் அரசியல் வித்தியாசமாக இருக்கும். அவர் நிச்சயம் மாற்றத்தை விதைப்பார். மக்களுக்கு தொந்தரவு செய்யாமல் பொதுக்கூட்டம், பேரணிகள் போன்ற கட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் கலாச்சாரத்தை உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார்.

அவரது அனைத்து அரசியல் வளர்ச்சிக்கும் ரசிகர் மன்றங்கள் உழைக்கத் தயாராக உள்ளோம். ராமநாதபுரத்தைத் தொடர்ந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கலில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதன்பின் அடுத்தடுத்த மாவட்டத்திலும் கூட்டம் நடத்தும் திட்டம் உள்ளது என்றார்.

18masan_M.Ragunathan (2) எம். ரெகுநாதன் பிறந்த மண்ணில் கட்சி தொடங்குவது மகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் பரமக்குடியைச் சேர்ந்த எம்.ரகுநாதன் கூறும்போது, நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததை கமல் அறிவித்துள்ளார். அவர் பிறந்த ராமநாதபுரம் மண்ணில் இருந்து அரசியல் பிரவேசத்தை தொடங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது அறிவிப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

மாவட்டப் பொருளாளர் பரமக்குடி ஏ.சண்முகசுந்தரம் என்ற சரவணன் கூறியதாவது, ராசி பார்த்து மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் அரசியல் கட்சியைத் தொடங்குவர். ஆனால் எங்கள் தலைவர் தான் பிறந்த மண்ணில் இருந்து அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறார். இதன் மூலம் தண்ணி இல்லா காடு என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் அகில இந்திய அளவில் பிரபலமடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x