

சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக தொடர்ந்துஉள்ள வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ரூ.10 லட்சம் மானநஷ்டஈடு கோரி 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் தனது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்யும் வகையில் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘தற்போது எதிர்க்கட்சிதலைவராக உள்ள தனக்கான பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இந்த நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. இந்த வழக்கில் அனைத்து சட்ட நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற தயாராக உள்ளேன்’ என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இதுதொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு (நவ.3) தள்ளிவைத்துள்ளார்.